Monday, September 19, 2016

சோழம்

சோழ மன்னர்கள்.

பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி ! 

சோழ மன்னர்கள்
~~~~~~~~~~~~~

வட வேங்கடம், தென்குமரிக்கு இடையேயான நிலப்பரப்பே முற்காலத்தில் தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பண்டைக்காலத்தில் இதனை ஆட்சி புரிந்தோர் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர்.

இதில் தமிழகத்தின் கீழ்ப்பகுதியை தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்த அரச மரபினர் சோழர்கள் ஆவர்.

சங்க காலச் சோழ மன்னர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் முடிந்தது என்பது ஆராச்சியாளர்களின் ஆராய்வில் கண்டறியப்பட்ட ஒன்று.

இக் கடைச் சங்க காலத்திற்கு முற்பட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சோழமண்டலத்தை ஆட்சிபுரிந்த சோழமன்னர்கள் காந்தன், தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன், இளஞ்சோட்சென்னி, கரிகாலன், கிள்ளி வளவன், நலங்கிள்ளி, கோப்பெரு நற்கிள்ளி, பெருவறற்கிள்ளி, நெடுங்கை கிள்ளி, மாவளத்தான், செங்கணான், நல்லடி என்போரின் வரலாறு மிகச் சுருக்கமாகவே கடைச் சங்க நூல்களான புறநானூறு, அகநானூறு, முதலான நூல்களில் காணப்படுகின்றன. 

சங்க காலத்திற்குபின் கி.பி.9 ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டதில் சோழர்கள் பற்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தரும் செய்திகள் இவர்கள் சோழநாட்டில் இருந்தார்கள் என்ற அளவில் மட்டுமே உணர்த்தும். இதற்கு காரணம் இவர்கள் தாழ்ந்த நிலையை அடைந்து பிற வேந்தருக்கு அடங்கி வாழ்ந்திருக்க வேண்டும்.

பிற்காலச் சோழர்கள்
~~~~~~~~~~~~~~~~

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவ முதலில் அடிகோலியவன் கி.பி. 9ம் நூற்றாண்டின் இடையில் தோன்றிய விசயாலயன் என்னும் சோழ மன்னனே ஆவான். 

சோழன் விசயாலயன் கி.பி.846-881
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குமாராங்குசன் என்ற சோழ மன்னனுக்கு புதல்வனாய் பிறந்தவன் விசயாலயன். இவ் விசயாலயன் வழித் தோன்றிய மன்னர்களே பிற்காலச் சோழர்கள் ஆவர் ..ராசராச சோழன் உள்பட.

திருச்சிற்றம்பலம்

சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது 
தற்சிறப்புப் பாயிரம்) 

திருச்சிற்றம்பலம் 

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 

மறைந்திட மூடிய மாய இருளை 
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 

விலங்கு மனத்தால், விமலா உனக்கு 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே 
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே 
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் 
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 

திருச்சிற்றம்பலம் 

மாணிக்கவாசகர்.

#ஓம்

பக்தி.

நமக்கு, 'அ, ஆ' எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு; அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம். கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம் செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா... அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்; அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான்.
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் சபையில், அமைச்சராக இருந்தார். மன்னரின் படைக்கு, குதிரை வாங்கும் பணி, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரும் பணத்துடன் கிளம்பிச் சென்ற போது, வழியில் புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்னுமிடத்தில், மந்திர ஒலி கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, குருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். அவரிடம், தன்னை சீடராக ஏற்று உபதேசமளிக்கும்படி வேண்டினார், மாணிக்கவாசகர். 
குருவும் அவருக்கு தீட்சை அளித்தார். சற்று நேரத்தில் குரு மறைந்து போக, 'சிவபெருமானே குருவாக வந்து, தனக்கு உபதேசம் அளித்துள்ளார்...' என புரிந்து, உள்ளம் உருகி பாடினார்; அதுவே, திருவாசகம்.
குதிரை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை, சிவாலய பணிக்கு செலவிட்டார்.
இதையறிந்த மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார். பக்தனின் பெருமையை உலகிற்கு உணர்த்த, நரிகளை, பரிகளாக்கி, அதை, மதுரை மன்னனிடம் ஒப்படைத்தார், சிவபெருமான். ஆனால், அன்று இரவில், அக்குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக, மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டித்தான். அப்போது, வைகையில் வெள்ளம் வரச் செய்தார் சிவன்.
ஊருக்குள் வெள்ளம் வந்து விடும் என பயந்த மன்னர், ஆற்றங்கரையை உயர்த்த, வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரும்படி உத்தரவிட்டார். வந்தி எனும் முதிய சிவ பக்தைக்காக, கூலியாளாக வந்து வேலை செய்தார், சிவபெருமான். ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியில் களைத்து தூங்குவது போன்று பாவனை செய்தார், எம்பெருமான். அங்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்குபவரைப் பார்த்ததும், அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி, உலகில் உள்ள எல்லா உயிர்களின் மீதும் விழ, வந்திருப்பது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட மன்னர், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டார்.
பக்தருக்காக, கடவுள் அடி வாங்கியுள்ளார் என்றால், அது மாணிக்க வாசகருக்காகத் தான்!
திருப் பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோவிலில், மாணிக்கவாசகருக்கு சன்னிதி உள்ளது. மற்ற கோவில்களில் சிவனுக்கே உற்சவம் நடக்கும். இங்கே மாணிக்கவாசகருக்குத் தான் உற்சவம் நடக்கிறது. இதை, பக்தோற்ஸவம் (பக்தனுக்கு நடத்தும் விழா) என்பர். ஆனி மகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும்.
பக்தியுள்ளவர்களுக்கு சோதனை வருவது இயற்கை; இறைவன் அதிலிருந்து விடுதலை தருவான் என்ற நம்பிக்கையோடு, அதைத் தாங்கும் பக்குவத்தைப் பெற்று விட்டால், இறைநிலையையே அடைந்து விடலாம் என்பதற்கு, மாணிக்கவாசகரின் வரலாறு உதாரணம்.

#ஓம்

Saturday, September 10, 2016

நமசிவாய மந்திரம்

காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி 
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது 
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது 
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1) 

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால் 
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது 
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் 
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2) 

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து 
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் 
தக்க வானவராத் தருவிப்பது 
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3) 

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் 
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் 
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி 
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4) 

கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள் 
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் 
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5) 

மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய 
பந்தனை யவர் தாமும் பகர்வரேல் 
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் 
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6) 

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் 
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் 
விரவியே புகுவித்திடும் என்பரால் 
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7) 

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் 
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் 
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை 
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8) 

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் 
பாதம் தான்முடி தேடியப் பண்பராய்
யாரும் காண்பதரிதாகி அலந்தவர் 
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9) 

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் 
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் 
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் 
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10) 

நமச்சிவாயப்பதிகத்திற்க்குப்பின் ஓம் மங்களம் பாடல் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.

இனி பாடல் வரிகள் தமிழில் 

ஓம் மங்களம் ஓங்கார மங்களம்

ஓம் நமசிவாய மங்களம்

ந மங்களம் நகார மங்களம்

நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)

ம மங்களம் மகார மங்களம்

மஹா தேவ தயாசிந்து ஈச மங்களம் (ஓம்)

சி மங்களம் சிவாய மங்களம்

சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)

வ மங்களம் வகார மங்களம்

வாத பேத ரஹ’த் பர பிரம்ம மங்களம் (ஓம்)

ய மங்களம் யகார மங்களம்

யதா தத்வ பரிக்ஞான வேத மங்களம் (ஓம்)

Shivam

Everything is God!  Sambo Mahadeva.